தருமபுரி, அக். 29 -
தருமபுரி மாவட்டம் முழுவதும் — தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பொரத்தூர், புலிக்கல், எர்ரனஅள்ளி, தும்பலஅள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சனஅள்ளி, புலிகரை, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் — மலைகளிலும், பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஏரிகளிலும் இருந்து இரவு பகலாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், அதிகாரிகளின் ஆசியுடன் டிராக்டர்கள் மற்றும் கர்நாடக பதிவெண் கொண்ட டிப்பர் லாரிகள் மூலம் நொரம்புமண், க்ராவல் மண், உளிக்கல், கருங்கல் போன்ற கனிம வளங்கள் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் இயற்கை வளங்கள் அழிவதோடு, நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதன் விளைவாக வருங்காலங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் சிலர் பண ஆசையில் கண்மூடித்தனமாக செயல்படுவதால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பல ஏரிகளிலும் மலைப்பகுதிகளிலும் அனுமதியின்றி பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் கனிம வளங்கள் அள்ளப்படுவது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், “நாங்கள் கனிம வளத்துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளோம்” எனக் கூறி தப்பிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.
இரவு பகலாக மண் கடத்தல் நடைபெறுவதால், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி நிலவுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இயற்கை வள கொள்ளையை தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

.jpg)